உடல் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் அவசியம். ஆனால் பல்வேறு காரணங்களால் நோய்த் தாக்கம் ஏற்படுகிறது. வாய்வுத் தொல்லையும் அவற்றில் ஒன்று.
ஒருவருக்கு வாய்வுத் தொல்லை இருப்பதற்குக் காரணம்- அவர் உட்கொள்ளும் உணவுதான். ஒருவரின் ஜாதகத்திலிருக்கும் லக்னாதிபதி அவரின் உடலைக் குறிக்கும். அந்த லக்னாதிபதியின் நிலையைப் பார்த்து, அவரின் உடலிலிருக்கும் நோய்களைக் கூறிவிடமுடியும்.
2-ஆம் பாவத்தில் இருக்கும் கிரகம் அந்த மனிதர் உண்ணும் உணவைப் பற்றிக் கூறிவிடும். 6-ஆம் பாவத்தைப் பார்த்து, எப்படிப்பட்ட நோய் இருக்கும் என்பதைக் கூறிவிடலாம்.
6-ஆவது பாவத்திற்கு 6-ஆவது பாவமான 11-ஆம் பாவத்திற்கு அதிபதி, ஒரு மனிதரின் சிந்தனை, லாவம், வயிற்றிலிருக்கும் நோய் ஆகியவற்றைக் குறிக்கும். அந்த மனிதரின் 5-ஆவது பாவம் வயிறு என்றால், 11-ஆவது பாவம் வயிற்றில் நடக்கும் விஷயங்களைக் காட்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, 5-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், அவர் எப்போதும் பயத்துடன் வாழ்வார். அதனால் அடிக்கடி வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுவார். காலப்போக்கில் அது வாய்வு நோயாக மாறிவிடும்.
ஜாதகத்தில் 5-ஆம் பாவாதிபதி 6 அல்லது 8-ல் இருந்து, சந்திரன் பலவீனமாக இருந்தால், அவர் எதையும் ஆழமாக சிந்திப்பார். அதனால் சரியாகத் தூக்கம் வராது. வாய்வுத்தொல்லை உண்டாகும். பித்தம் அதிகமாக இருக்கும்.
2-ஆம் பாவத்தில் செவ்வாய், 3-ல் கேது இருந்தால், அவர் சூடான உணவைச் சாப்பிடுவார். அவருக்கு வயிறு சம்பந்தப் பட்ட நோய்வரும். வாய்வுத்தொல்லை ஏற்படும்.
ஒரு ஜாதகத்தில் 6-ல் சனி இருந்தால், அவருக்கு தீராத நோய்வர வாய்ப்பிருக்கிறது. வாய்வுத்தொல்லை, பித்தம் ஆகியவை உண்டாகும். அந்த தொல்லையால், சனி "சைட்டிக்கா' என்ற நோயைக் கொடுப்பார்.
லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, 6-ல் சனி இருந்தால், அவருக்கு தூக்கம் சரியாக வராது. எப்போதும் சிந்தனையிலேயே இருப்பார். தூக்கக் குறைவு காரண மாக வயிற்றில் உணவு ஜீரணமா காது. வாய்வுத் தொல்லையால் சிரமப்படுவார்.
4-ஆவது பாவத்தில் சூரியன், 7-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் கடுமையாக உழைப்பார். உரிய நேரத்தில் சாப்பிடமாட்டார். அதனால் அதிக பித்தம் உண்டாகும். பித்த வாய்வு உருவாகும். தலைவலி, முதுகுவலி, வயிற்றுவலி ஆகியவையும் வந்துசேரும்.
ஒருவரின் ஜாதகத்தில் 5-ஆம் பாவம் வயிற்றைக் குறிப்பிடும்.
அந்த பாவத்திற்கு சூரியன், செவ்வாய், சனியின் பார்வை இருந்தால், அவருக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய்வரும். பித்தநோய் உண்டாகும். பித்த வாய்வு அதிகமாக இருப்பதால் தலைவலி வரும்.
லக்னத்தில் செவ்வாய், 3-ல் பலவீனமான சந்திரன் அல்லது நீசச் சந்திரன் இருந்து, 7-ல் சனி இருந்தால், அவர் எப்போதும் கற்பனை உலகிலேயே இருப்பார். உணவு சரியாக ஜீரண மாகாது. வாய்வுத் தொல்லையால் பாதிக்கப் படுவார்.
ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது, குரு பகவான் 6, 8, 12-ல் இருந்தால், அவருக்கு அதிகமான அலைச்சல் இருக்கும். சரியான நேரத்தில் சாப்பிடமுடியாது. அதனால் பித்த வாய்வு உருவாகும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு பித்த வாய்வு அதிகமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு சீதள வாய்வு அதிகமாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு திரிதோஷ வாய்வு இருக்கும். கடக ராசிக்காரர்களுக்கு சீதள வாய்வுத்தொல்லை இருக்கும். சிம்ம ராசிக் காரர்களுக்கு பித்த வாய்வு அதிகமாகவும்; கன்னி ராசிக்காரர்களுக்கு சீதள வாய்வு அதிக மாகவும்; துலா ராசிக்காரர்களுக்கு உஷ்ண வாய்வும்; விருச்சிக ராசிக்காரர்களுக்கு சீதள வாய்வும்; தனுசு ராசிக்காரர்களுக்கு பித்த வாய்வும்; மகர ராசிக்காரர்களுக்கு சீதள வாய்வும்; கும்ப ராசிக்காரர்களுக்கு உஷ்ண வாய்வும்; மீன ராசிக்காரர்களுக்கு சீதளம், கப வாய்வும் இருக்கும்.
ஒருவருக்கு சூரிய தசை நடக்கும்போது, அந்த சூரியன் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்தால், அவருக்கு அப்போது அதிகமான சிந்தனை, அலைச்சல்கள் இருக்கும். வயிற்றில் உஷ்ணம், பித்தம் அதிகமாக இருக்கும். உஷ்ண- பித்த வாய்வு நோயால் அவர் அவதிப்படுவார்.
பரிகாரங்கள்
தினமும் அதிகமாக நீர்பருக வேண்டும். தன் லக்னாதிபதி, 5-க்குரிய கிரகத்தின் ரத்தினத்தை அணியலாம். படுக்கையறையின் தெற்கில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக் கூடாது. அரசமரத்திற்கு ஒரு தீபமேற்றி வைக்க வேண்டும். வீட்டில் அவசியமற்ற- இறந்து போன எலெக்ட்ரானிக் பொருட்களைச் சேர்த்துவைக்கக்கூடாது. தினமும் அரச மரத்திற்கு நீரூற்றி, ஒருமுறை சுற்றிவந்து வணங்குவது நல்லது. வீட்டின் தென்கிழக்கு அல்லது தென்மேற்கில் கிணறு இருப்பது நல்லதல்ல. தெற்கில் அல்லது கிழக்கில் தலை வைத்துப் படுக்கவேண்டும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நன்று. தினமும் சிவனுக்கு நீரால் அபிஷேம் செய்யலாம். சனிக்கிழமை ஆஞ்சனேயரை ஒன்பதுமுறை வலம்வந்து வணங்குவது நலம் சேர்க்கும்.
செல்: 98401 11534